Monday 26 March 2012

ட்ரெஸ்சேஜ், ஜம்பிங் என இரண்டு விதமான போட்டிகள்


 ‘மெட்ராஸ் ரேசிங் கிளப்’, ‘இ.சி.இ’, ‘ஆதித்யா’ எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள எட்டு கிளப்களில் இருந்தும் குதிரைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. ஒவ்வொரு கிளப்பில் இருந்தும் சிறியவர்கள், பெரியவர்கள் எனப்  போட்டியாளர்கள் பலர் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், முதல் நாள் குதிரைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.  இரண்டாம் நாள் காலை போட்டிகள் ஆரம்பித்தன. ட்ரெஸ்சேஜ், ஜம்பிங் என இரண்டு விதமான போட்டிகள் நடந்தன. ட்ரெஸ்சேஜ் என்பது குதிரையைக் கட்டுப்படுத்துவது ஆகும். ஒரு மைதானத்தில் ஜாக்கிங் செல்வது போல, குதிரையுடன் செல்லும் குதிரை ஓட்டுநர், எப்படிக் கட்டளைகள் மூலம் குதிரையைக் கட்டுப்படுத்துகிறார் என்பது பரிசோதிக்கப்படுகிறது. அதோடு வட்டம் அடிப்பது, அரைவட்டம் அடிப்பது எனப் பல விஷயங்களும் ட்ரெஸ்சேஜில் அடக்கம். இவை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ”ரைடருக்கும் குதிரைக்குமான இணக்கத்தை மேம்படுத்தும் பயிற்சிதான் ட்ரெஸ்சேஜ்” என்று நமக்கு விளக்கம் தந்தார் ஒரு பயிற்சியாளர். ஒவ்வொரு ரைடரும் குறைந்தது இருபது நிமிடம் ட்ரெஸ்சேஜ் செய்கிறார்கள். ட்ரெஸ்சேஜ் முடித்ததும் அனைத்துக் குதிரைகளும் அடுத்துச் செல்வது ஜம்பிங் குக்கு.





ஜம்பிங்கில், மூன்று முதல் நான்கு அடி உயரம் கொண்ட தடைகளைக் குதிரைகள் தாண்டிச் செல்ல வேண்டும். இதில் குதிரையின் வேகம், ஆற்றல் ஆகியன பரிசோதிக்கப்படுகின்றன. 60 மீட்டர், 90 மீட்டர் எனப் பல பிரிவுகள் உள்ள ஜம்பிங்கில், 90 மீட்டர் ரைடையே பல ரைடர்கள் தேர்வு செய்கின்றனர். ரைடர்களுடைய திறமையைப் பொறுத்து 25 முதல் 30 விநாடிகளில் அனைத்துத் தடைகளையும் தாண்டிவிடுகின்றனர். ஒவ்வொரு தடையைத் தாண்டும்போதும், ரைடர்கள் தங்கள் குதிரைகளைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுகின்றனர். இது குதிரைகளுக்கும் ரைடர்களுக்குமான  இணக்கத்தை வலுப்படுத்துகிறது.



90 மீட்டர் ஜம்பிங்கில் முதல் இடம் பெற்றவர் ஆரோவில்லைச் சேர்ந்த பள்ளி மாணவி ஷகித் கபூர். ”நான் எட்டு வருஷமாக் குதிரையேற்றப் பயிற்சி செய்றேன்.  இதுல, மத்த விளையாட்டு போட்டிகள்ல இருக்கிற மாதிரி திறமையும் பயிற்சியும் இருந்தா மட்டும் போதாது. அதோட நமக்கும் குதிரைக் கும் நல்ல உறவும் இருக்கணும். குதிரை, ரைடர்னு  இரு தரப்புலயும் நல்ல ஒத்துழைப்பும் மனநிலையும் இருந்தா மட்டும்தான் இதில் சாதிக்க முடியும். குதிரையோட நல்லாப் பழகறது, அதுக்குத் தினமும் நாமே உணவு தர்றது, சிறப்பா விளையாடும்போது தட்டிக்கொடுத்துப் பாராட்டுறது இது எல்லாம் இருந்தாத்தான், குதிரை நாம சொல்றதைக் கேட்டு நமக்குக் கட்டுப்படும். குதிரையேற்றத்தை உடனே கத்துக்கிட்டு விளையாட முடியும்னு நினைக்காதீங்க. தனியா குதிரை மேல ஏறவே ஆறு மாசம் ஆகும்” என்கிறார்.



ட்ரெஸ்சேஜ் மற்றும் ஜம்பிங்கில் சென்னை வீரர்களே ஆதிக்கம் செலுத்தி, பல பிரிவுகளில் பரிசுகளையும் வென்றனர். எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லோர் உடம்பிலும் எக்கச்சக்க குதிரை சக்தி!

No comments:

Post a Comment